கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் உண்ணாவிரத போராட்டம்

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊடக துறையில் பங்கு கொண்டவனாக அந்த போராட்டத்தின் புரிதலை வேண்டி ஒரு பதிவு.


கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின்  உண்ணாவிரத போராட்டம் 
23/12/2014 அன்று சென்னையில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்தது இதில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். தலைவர் சகிலன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், சங்க நிர்வாகிகள் விஷ்ணுராம், தேனி தமிழன், சேலம் தாமோதரன், திருச்சி விஷ்ணுவர்த்தன், நாகை ஆசைத்தம்பி, காஞ்சி கண்ணன், கடலூர் தமிழ், கடலூர் ஆனந்தன், சென்னை வெள்ளைச்சாமி, வெங்கடேஷ், தணிகா, விருதுநகர் சந்திரன், நாமக்கல் முருகேசன், வேலூர் தனவேல், வேலூர் சுரேஷ்  உட்பட பலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் அதோடு பாண்டிச்சேரி சலீம், லோட்டஸ் டிவி உரிமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆனந்தன் lco (local connection operator ) மற்றும் ஞான முருகன் lco, மூர்த்தி, சங்கர் மற்றும் சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர் அசோசியேசன் தலைவர் கருணாநிதி ஆகியோரின் நேர்காணல்

மூர்த்தி :

எனது பெயர் மூர்த்தி நான் இருபது ஆண்டுகளாக இந்த ஆப்ரேட்டிங் தொழிலில் இருந்து வருகிறேன். நான் அதிகம் படிக்காமல் ஊர் சுற்றி திரிந்தேன். நண்பர் உதவியால் இந்த தொழிலில் இறங்கினேன். அப்போது சன் டிவி இணைப்பு என்று தான் சொல்வார்கள். கேபிள் இணைப்பு என்றால் மக்களுக்கு தெரியாது. நான் இந்த வேலைக்கு வந்த புதியதில் இணைப்பு தருவதை சவாலாகவே உணர்ந்தேன். எங்கள் பகுதியில் மாடி வீடு, கூரை வீடு, ஓட்டு வீடு, மண்டபம், கடை வீதி, அரிசி ஆலை, போன்ற எல்லா இடங்களுக்கும் சைக்கிளில் ஒயரோடு அலைந்து திரிவேன்.
ஹய் ஜம்பிங், டைவிங், லாங் ஜம்ப் என பலவாறு சாகசங்களை புரிந்து தான் ஒவ்வொரு வீட்டிற்கும் கேபிள் இணைப்பு தருவேன். ஒவ்வொரும் மாதமும் நடையாய் நடந்து பயனாளியிடம் இருந்து பணத்தை பெற்று கணக்கு முடித்து அதை கண்காணிப்பதற்குள் நான் செத்து சுண்ணாம்பாகிவிடுவேன். அனுபவமும் நம்பிக்கையும் என்னை மேலும் இந்த துறையில் தொடர வைத்தது. ஊரில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. பிற ஆப்ரேட்டர்கள் வந்தாலும் என்னை பலர் நம்பினர். முழு பொறுப்பையும் ஏற்று எனக்கு கீழ் நண்பர்களை சேர்த்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்தேன். தொழில் போட்டிகள் இன்று வளர்ந்து நின்றாலும் , நம்பிக்கையும் நாணயமும் தான் இந்த தொழில் மட்டும் அல்ல எந்த தொழிலும் நம்மை உயர்த்தும். இன்று அரசு கேபிள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதிகாரிகள் தான் அதை நாசம் செய்கிறார்கள். அன்றைய பொருளாதார நிலை வேறு ஆனால் இன்று அவ்வாறு இல்லை இந்த தொழிலை நம்பித்தான் என் குடும்பமும் நண்பர்கள் குடும்பமும் வாழ்கிறது. மேல்மட்ட நிறுவனங்களுக்கும் பயனாளிகளுக்கும் இடையில் அதிக அழுத்தம் எங்களுக்கு தான்.
ஒவ்வொரு lco வும் அவரவர்கள் பகுதியில் முதலீடு செய்து , கட்டமைப்புகளை உருவாக்கியே இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வளவு ஆண்டு காலம் எங்களை சுரண்டி எடுத்த scv யிடம் இருந்து தற்போது விடுதலை பெற்றதாகவே உணர்கிறேன். ஆனால் அரசு தரப்பில் கொள்கை சார்ந்து சில தெளிவான அறிவிப்புகளை வேண்டுகிறோம். மாதம் 150 வாங்க உத்தரவு இடவேண்டும்.

சங்கர்
அரசு நிர்ணயித்துள்ள மாத கட்டனம் 70 ரூபாய் அதில் அரசுக்கு 20 ரூபாய் எங்களுக்கு 50 ரூபாய் இது எப்படி இன்றைய பொருளாதார சூழலில் போதும் ?? மாதிரிக்கு சொல்கிறேன் , ஒரு கிராமத்தில் 50 வீடு இருக்கின்றது என வைத்துக்கொண்டால், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் 70 எனில் மாதம் 50 வீட்டு 50*70 = 3500 என்று வைத்துக்கொண்டால் , ஒரு அலுவலகம் திறந்து வைத்து 50 வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுத்து, பராமரிப்பு செய்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து, மின்சாரம், தண்ணீர் வரி , என பல செலவுகள் இருக்க எங்களுக்கு என்ன வருமானம் கிடைக்கும் ? குழந்தைகளின் படிப்பு செலவு , மருத்துவச் செலவு, எல்லாம் எப்படி ? இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் அதற்காகவே இந்த போராட்டம் என்றார்.

ஞான முருகன் lco

செய்யாறு எனது சொந்த ஊர், அரசு கேபிள் நிச்சயம் ஒரு நல்ல திட்டம் ஆனால் பிரச்சனைகள் நிறைந்த அமைப்பாக உள்ளது. நான் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் ஆனால் நேற்று வந்தவர்கள் என்னை அழிக்க பார்க்கிறார்கள். அரசு கேபிள் ஒரு முறைபடுத்தப்பட்ட அமைப்பு என்று சொல்ல முடியாது. பல அடக்குமுறைகளை அதிகாரிகள் கையாளுகின்றனர். நான் அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக எனது பகுதியில் கதிரவன் என்ற அனுபவம் இல்லாத ஒருவரை கொண்டு வருகின்றனர். அவருக்கு உரிமைகள் வழங்கப்படுகிறது. சிக்னல் அவருக்கு வழங்கப்படுகிறது. அவர் தற்போது புதியதாக உருவாகி உள்ள அரசியல் கட்சி தலைவர் பெயரை சொல்லிக்கொண்டு அராஜகம் செய்து வருகிறார். நான் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியை நாடியுள்ளேன். இது குறித்து காவல் துறையில் கடந்த 1.3.2014 அன்று புகார் கொடுத்தேன். ஆனால் இன்று வரை ஒரு விசாரணை கூட இல்லை. இது எப்படி உள்ளது என்றால், அரசு கூறும் தொகையை நான் வாங்கியாக வேண்டும், இல்லையென்றால் அரசு பணி என்ற பெயரில் எனது பகுதியில் எனக்கு சவாலாக ஒருவரை கொண்டு வரும். அவர்களை வைத்து சேவையை தொடரும். இதுவரை நான் முதலீடு செய்தது குறித்து அரசுக்கு கவலை இல்லை. இந்த சேவையை வழங்க எனது லாப நஷடம் எதை பற்றிய புரிதலும் அரசுக்கு வேண்டாம். எனது இத்தனை வருட பணியும் அனுபவமும் , கேபிள் துறையில் எனது சேவையும் குப்பைகளாக்கப்படும்? இதற்கா? அரசு கேபிள்?? என்  பகுதியில் உள்ள வீடுகளுக்கு நான் விநியோகம் செய்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிலும் மாதம் 100ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறோம் . 100 ரூபாய் என்பது சங்கத்தில் கூடி பேசி நிர்ணயம் செய்த தொகையே, தமிழகம் முழுவதும் 100 ரூபாய்க்கு  குறைவாக யாரும் வசூல் செய்யவில்லை இதை தான் நாங்கள் 150 ஆக கேட்கிறோம்.

செஞ்சி ஆனந்தன்

நான் இருபது வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் இருந்து வருகிறேன், அப்போதெல்லாம் ஆப்ரேட்டர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, தொழில்நுட்பம் குறைவாக இருந்த காலத்தில் ஆப்ரேட்டர்கள் மதிக்கப்பட்டனர் . ஒரு டெக் வைத்துக்கொண்டு படம் பாடல் என கிராமம் முழுவதும் ஒளிபரப்பிய காலங்களில் ஆப்ரேட்டர்கள் மரியாதையாக பார்க்கப்பட்டார்கள். ஆனால் வளர்ந்து வரும் இந்த தொழில் நுட்பத்தா ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரம் நசுங்கி போய்க் கொண்டிருக்கிறது. இலவசமாக தொலைக்காட்சிகளை மக்கள் பார்த்துக் கொண்டு வந்த சூழலில் கட்டண சேனல்களை அறிமுகப்படுத்தி லாப வேட்டையை star, s.c.v போன்றவைகள் அறிமுகப்படுத்தியது. 10 ரூபாய், 14, 28 ரூபாய் என துவங்கி 50 ரூபாய் என அவர்கள் மட்டும் கட்டணத்தை உயர்த்தியவாறு இருந்தார்கள். ஆப்ரேட்டர்கள் மீது நம்பிக்கையில்லாமல் DTH கொண்டு வந்தார்கள். ஆப்ரேட்டர்களிடம் நீங்கள் இல்லை என்றால் என்ன மக்களை நாங்கள் நேரடியாக சந்திப்போம் என்று ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரத்தை முடக்க சன் குழுமத்தால் dth கொண்டு வரப்பட்டது.கேபிள் ஆப்ரேட்டர்களுக்கும் dth சேவகர்களுக்கும் சண்டை மூட்டி விட்டார்கள் . இப்படி பட்ட சூழலில்  அரசு கேபிள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே அதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை முறைப்படுத்தப்பட வேண்டும் . அரசியல் மற்றும் அதிகார தலையீடு அதிகரித்து வருகிறது. அரசு கேபிள் துவங்குவதற்கு முன் எல்லா மாவட்டங்களிளும் இணைப்புகள் பற்றிய விபரங்களை  கேட்டனர், பொதுவாக இணைப்பு குறித்து ஆப்ரேட்டர்கள் துள்ளியமான விளக்கம் அளிக்க மாட்டார்கள். காரணம் அவ்வாறு தருவது கடினமும் கூட . இணைப்பு விபரம் குறித்து அரசு கேட்டதும் கிராமத்து ஆப்ரேட்டர்கள் விபரம் தெரியாமல், குறைவான இணைப்பு என்று கூறினால் அங்கிகாரம் ரத்து செய்யப்படலாம் என நினைத்துக்கொண்டு அதிக அளவில் இணைப்புகள் இருப்பதாக அரசுக்கு தெரிவித்தனர். ஆனால் அரசோ நீங்கள் வைத்துள்ள இணைப்புகளுக்கு கட்டணம் வரி உள்ளிட்டவைகளை கட்ட ஆணையிட்ட போது அனைவரும் அதிர்ந்து போனார்கள். 5000 பாய்ண்ட், 3000 பாய்ண்ட்,1000 பாய்ண்ட், 200 பாய்ண்ட் என ஆப்ரேட்டர்கள் கொண்டுள்ள இணைப்புகளை பொருத்து அவர்கள் சிறு ஆப்ரேட்டர்கள் பெரும் ஆப்ரேட்டர்கள் என முடிவு செய்து கொள்ளலாம். பொதுவாக நகரங்களில் இருப்பவர்கள் பெரும் ஆப்ரேட்டர்களே, காரணம் அடுக்கு மாடி கட்டிடங்கள், அலுவலகங்கள், வங்கி,மருத்துவமனை பொது இடம் என அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் ஆனால் கிராமத்து ஆப்ரேட்டர்களை அவ்வாறு கணக்கில் கொள்ள முடியாது. கிராமத்தில் நான்கைந்து மாதம் சேர்த்து சந்தா கட்டும் வாடிக்கையாளர்களும் உண்டு. அவைகளையும் ஆப்ரேட்டர்கள் தான் கையாள வேண்டும். ஒவ்வொரு வாடிகையாளர்களின் நலனிலும் ஆப்பரேட்டர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆப்ரேட்டர்கள் நலனிலும் mso க்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு mso நலனிலும் அரசும், தொலைக்காட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இந்த வட்டத்தில் ஒருவர் தவறு செய்தாலோ லாப நோக்கம் பார்த்தாலோ அனனத்தும் பாதிப்படையும்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொழுது போக்கினை கொண்டு செல்கிறோம். ஒவ்வொரும் குடும்பமும் நாள் ஒன்றிற்கு 3.30 பைசா கட்டக்கூடாதா? அது அவர்களுக்கு பெரிய தொகை அல்ல.

கருணாநிதி (சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேசன் தலைவர்)

நான் 28 வருடங்களாக இந்த தொழிலில் உள்ளேன். இதை முழு நேரப்பணியாக நான் எடுத்துக்கொள்ள வில்லை. எனது நண்பரோடு சேர்ந்து கூட்டாக செயல் படுத்தி வருகிறோம். TRAI  சட்டப்படி அரசு கேபிள் நடத்தக்கூடாது என்பதே. காரணம் அவர்கள் ஆட்சி பெருமைகளை மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார்கள். மக்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்பது தான் அடிப்படை. அதோடு உரிமம் இல்லாமல் தான் பல mso க்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசு கேபிள் இல்லை .தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. இதுவரை, இந்திய அளவில் ஏறத்தாழ 1000 mso க்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் அதில் உள்ள உண்மை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அதோடு தமிழகத்தில் எறத்தாழ 14 mso க்கள் இருப்பார்கள் இவர்களை கொண்டுள்ள கன்ட்ரோல் ரூம் மற்றும் உபகரணங்கள் செயல்பாடு, சிக்னல் கடத்துதல் போன்ற சேவைகளுக்கு அரசு தரப்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது… ஏற்கனவே ஆப்ரேட்டர்கள் அவர்கள் வைத்திருந்த உபகரணங்களையும் , தொழில்நுட்ப அமைப்பையும், அரசு உரிமை கொண்டாதுவது எவ்வாறு நியாயமாகும்? அரசு கையில் எடுத்தால் அரசு முதலீடு செய்து வளத்தெடுப்பதல்லவா நியாயமாக இருக்கும். ஒரு சிறிய முதலீடும் போட மாட்டோம் மாவட்டம் முழுவதிலும் உள்ள கேபிள் செட்டப்புகளை நாங்கள் எங்கள் வசம் ஆக்கிக்கொள்வோம் என்பதை எப்படி புரிந்து கொள்வது? ஒரு ஆதிக்கத்திற்கு மாற்றாக ஆதிக்கமா? முன்பு லாபம் பார்த்தவர்களுக்கும் , ஊடகத்தை கட்டி ஆண்டவர்களுக்கும் மாற்றாக அரசின் நடவடிக்கை எப்படியா இருக்க வேண்டும்? . என்னை பொருத்தவரை ஒளிபரப்பில் டிஜிட்டல் சேவை கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு டிஜிட்டல் வந்தால் மட்டுமே சேவை எண்ணிக்கையில் உன்மை இருக்கும் . இப்போது அனலாக் தொழில்நுட்பம் உள்ளதால் , ஒரு இணைப்பில் ஒயரை முறுக்கி மற்றொடு திருட்டு இணைப்பை பெற இந்த டிஜிட்டல் மயமாக்கப்படாததே காரணம். அவ்வாறு டிஜிட்டல் கொண்டு வந்தால் திருட்டு இணைப்பு எடுக்க முடியாது, ஒவ்வொருவரும் செட் ஆப் பாக்ஸ் வாங்கி பயண் படுத்திக்கொள்ளலாம். யாருக்கும் எந்த சிக்கலும் இருக்காது , இதற்கான முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். அதோடு ஆப்ரேட்டர்களுக்கு மாற்றாக ஆப்ரேட்டர் அல்லாதோரை முன்னிலைப் படுத்தும் போக்கினை அரசு கைவிட வேண்டும். அதோடு குறிப்பாக தொலைக்காட்சிக்கான கட்டண விடயங்களில் அரசு தலையிட வேண்டும். சிறப்பு பேக்கேஜ் என்றும் சலுகை என்றும் கட்டண சேனல்கள் இன்று பெருமளவு வளர்ந்து உள்ளது. அதில் மிகவும் வருந்தத்தக்கது ஒரு பார்வையாளர் தாம் விரும்பும் சேனலை பார்க்க நினைத்தால் அதற்கு மட்டும் வாய்ப்பு தராமல் இந்த பேக்கேஜ் கட்டிணால் இத்தனை சேனல் வரும் . 5 சேனல் கொண்ட பேக்கேஜ் 3 சேனல் கொண்ட பேக்கேஜ் என்று வாய்ப்பை திணிக்கும் உரிமை யாருக்கு உள்ளது? தாம் விரும்பும் சேனலை பார்க்கும் உரிமை ஒரு பயனாளருக்கு இல்லாமல் போவதும் அவருக்கும் அவசியம் இல்லாத சேனல்கலை பேக்கேஜ் மூலம் தருவதும் எப்படி நியாயம்? இவை எல்லாம் கவனிக்க படவேண்டும்.

-ஜோ.கார்த்திக்

Comments

Popular posts from this blog

வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்