தொடர்பியல் பார்வையில் சினிமா துறையில் சினிமாவும், திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்களும், தணிக்கை துறையும், சமூகத்தில் சாமனியரின் மனநிலையும்.
தொடர்பியல் சார்ந்த பார்வையில் சினிமாவை அணுகுவதற்கு முன்,
தொடர்பியல் பார்வையை விடுத்து, பொதுவான கண்ணோட்டத்தில் சினிமாவை பார்ப்பதில் உள்ள கோளாறுகளையும்,
சினிமாவின் தற்போதைய இயல்பினையும், திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்களையும், தணிக்கை
துறையையும், பொது மக்களின் மனநிலையையும் சற்று ஆழ்ந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
சமூகத்தில்
உள்ள பிரச்சனைகளும் சினிமாவும்
இன்று சமூகத்தில பல பிரச்சனைகள் போராட்டங்கள் நடக்கின்றன,
மது, போதை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற பிரச்சனைகளும் தீண்டாமை, பயங்கரவாதம், இடஒதுக்கீடு,
மதரீதியான சிக்கல்கள் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவை அனனைத்திலும் சினிமாவின் பங்கு என்ன ?
நாம் அனைவரும் சினிமா பார்க்கிறோம். நாம் விரும்பும் திரைப்படத்தோடு
நம்மை இணைத்துக்கொள்கிறோம். ஒரு திரைப்பட கலைஞர் நினைத்தால் காட்சிகளை கொண்டு திரையின்
மூலம் எதனோடும் பார்வையாளனை இணைத்து வைத்திட முடியும். நாம் பார்த்த திரைப்படம் எப்படி
இருக்கிறது என்பதை பார்த்த உடன் பிறரோடு பகிர்வதும், கட்டணம் செலுத்தியதால் திரைப்படத்தை
விமர்சனம் செய்வதும் பார்வையாளர்களின் உரிமையே. அது அருமையென்றோ, அதிருப்தியென்றோ இருக்கலாம்.
ஆனால் இதை கடந்து ஒரு திரைப்படத்திற்கும், திரைப்பட கலைஞருக்கும்,
பார்வையாளருக்கும் நடுவில் உள்ள சமூக சார்ந்த கட்டமைப்புகளையும், உளவியல் சார்ந்த கட்டமைப்புகளையும்,
வணிகம் சார்ந்த கட்டமைப்புகளையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஒரு பார்வையாளர்களிடம் நீங்கள் பார்த்த சினிமா எப்படி இருக்கிறது?
எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், எனக்கு அப்படியல்லாம் எந்த ஐடியாவும் இல்லீங்க
மைண்டு ரிலாக்ஸ் பன்னணும் ஏதோ ஒண்ணு ஒரு 3 ஹாவர்ஸ் ஜாலியா இருக்கணும் என்ஜாய் பன்னணும்
என்று முடித்துவிடுபவர்கள் ஒரு புறமும். நைஸ், சூப்பர்ப், குட் ஜாப், கலக்கிட்டார்,
டைரக்டர் மாஸ் காட்டிட்டார், என்று ஒரு புறமும், டைரக்டர் சாகடிச்சிட்டான், மொக்க போட்டுட்டான்,
இது இப்படி வந்து இருக்க கூடாது, இப்படி வச்சி இருந்தா நல்லா இருக்கும், என்றும் கூறுபவர்களும், 1000 திரைப்படங்களை எடுத்து வெள்ளிவிழா கண்டவர்கள்
போல படம் அட்டு ஃபலாப், டைரைக்டர் ஃபாம் அவுட், ட்ரெண்டு அவுட் என ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் அடிக்குவிடுவதுமாக
இருக்கும் பார்வையாளர்கள் மற்றொருபுறம்.
திரைப்படத்தை விமர்சனம் செய்வது உரிமை என்று கூறிவிட்டு இவ்வாறு
திரைப்படங்களை விமர்சனம் செய்வதை எவ்வாறு தவறு என்று கூற முடியும்? இவ்வாறு விமர்சனம்
செய்வதன் மூலம் தான் இயக்குனர் அடுத்த படத்தில் அவரை திருத்திக்கொள்ள முடியும் அல்லவா?
அல்லது மக்கள் இயக்குனர்களை நெறிப்படுத்த முடியுமா? இதே போன்று படைப்பாளிகளும், நான் எடுத்த திரைப்படம் மக்களுக்கு புரிய வில்லை,
அவர்களின் ரசனைகளை மாற்ற இயலவில்லை, மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் போன்ற கருத்துக்களும்
முன்வைக்கப்படுவதுண்டு அல்லது திரைப்படம் ஓடவில்லை என்றதும் ஆள் முகவரியே இல்லாமல்
போகிறவர்களும் உண்டு.
பொதுவாக சினிமா என்றால் என்ன ? சினிமா எப்படி இருக்க வேண்டும்?
ஒரு நல்ல படைப்பாளி எதை எடுக்க வேண்டும்? என்றால் அதற்கு அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட
முடியாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் சினிமா குறித்து ஒவ்வொறுவருக்கும் பல வித பார்வை
உள்ளதை மறுப்பதற்கில்லை. மிகப்பெரிய தளமாக அமைந்துள்ள அச்சினிமா தளத்தில் திரைப்படத்தையும்,
திரைப்பட கலைஞரையும், பார்வையாளரையும் ஒன்று சேர்த்து நான்காம் நபரின் பார்வையாக நாம்
தொடர்பியல் பார்வையை அணுக வேண்டியது அவசியம் வருகிறது. சரி இங்கு உங்களிடம் தொடர்பியல்
சார்ந்த பார்வையில் சினிமா குறித்து சில அடிப்படை புரிதல்களை முன்வைக்க விரும்புகிறேன்.
சினிமா துறையில் திரைப்படத்தை இயக்கும் இயக்குனரின் சிந்தனை
அடிப்படை கருவாக அமைகிறது எனவே அடிப்படையில் ஒரு படைப்பாளி திரைப்படத்தை படைப்பதன்
நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? படைப்பாளிகளின் சிந்தனை அவர்தம் உள்ளார்ந்த வாழ்க்கை
அனுபவங்களை அவர்களின் பாதிப்பு நிகழ்வுகளை, மன குமுறல்களை வெளிப்படுத்துவதாக அவரின்
திரைப்படம் இருக்க வேண்டுமா? அல்லது அவர் வாழும் சமூக மக்களுக்காக அவர்களின் நிலையை,
சமூக பிரச்சனைகளை, குற்றங்களை, அவலங்களை, வெற்றி தோல்விகளை, உண்மை நிலையினை எடுத்துரைப்பதாக
இருக்க வேண்டுமா? அல்லது வணிகம் சார்ந்து அவர்களின் படைப்புகள் வசூலை மையமாக வைத்தும்,
வருவாயினை பெருக்கும் விதத்தில் மட்டும் திரைப்படம் எடுக்க வேண்டுமா? அப்படி வணிக நோக்கோடு
ஒரு படைப்பாளி சினிமாவை பார்க்கிறார் என்றால் அவர் தம் கதையில் எல்லாவற்றிக்கும் தயாரிப்பாளரின்
கட்டளைக்களுக்கேற்ப சமரசம் செய்ய வேண்டியது நிலைக்கு தள்ளப்படமாட்டாரா? அல்லது தன்னை சீர்தூக்கிக் கொள்ளும் தேவையில்லாமல்
தன்னுடைய பின்னோக்கிய பார்வையில் நின்றே இதைத்தான் மக்கள் பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தை விதைக்க மாட்டாரா?
கதையில் சமரசம் செய்ய வேண்டிய நிலை எப்போது வரும் ?
தம் படைப்பில் கதையை மாற்றியோ, தம் கருத்தை நீக்கியோ, சமரசம்
செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு எப்போது தள்ளப்படுவார் என்றால், எப்போது அவரது படைப்பு
பெரும்பான்மையாக வாழும் சமூக மக்களின் மனநிலைக்கு கருத்திற்கு, விருப்பத்திற்கு, எதிராக
மாற்றாக அமைகிறதோ அப்போது படைப்பாளி அதில் சமரசம் செய்து கொள்கிறார். காரணம் வணிகம்
சார்ந்து வருவாயினை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பதால் பெரும்பான்மை சமூகத்தை அவர்
எதிர்க்க ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. காரணம் பெரும்பான்மை சமூக மக்களிடம் தம் படைப்பு
எதிர்க்கருத்தை விளைவித்தால் பெரும்பான்மை வகுப்பை சேர்ந்த மக்கள் படைப்பாளியையும்
அப்படைப்பினையும் நிராகரிப்பர் அதன் விளைவு வருவாய் இழப்பு ஏற்படும். உயர் வர்க்க மக்கள்
மத்தியில் அடையாளம் மறுக்கப்படும் . நம் சமூகத்தில் தற்போது வரை மாறாதிருப்பது பெரும்பான்மை
வகுப்பை சார்ந்து வாழும் மக்களின் மனநிலை சிறுபான்மை வகுப்பை சார்ந்து வாழும் மக்களுக்கு
எதிராகத்தான் கட்டமைக்கப்பட்டிறுக்கிறது .
இதன்
விளைவு படைப்பாளி பெரும்பான்மை மக்களை திரையில் திருப்தி படுத்த வேண்டி அவர் சிறுபான்மை
மக்களுக்கு எதிராக திரைப்படத்தை வடிவவைக்க வேண்டி இருக்கிறது. இதன் மூலம் சிறுபான்மை
மக்கள் சமூகத்திற்க்கு எதிரானவர்களாக, குற்றவாளிகளாக, தவறானவர்களாக திரைப்படத்தில்
வழக்கமாகி போய் இருக்கிறது.
பெரும்பான்மை மக்களுமும் மனிதர்களே அவர்கள் பெரும்பான்மையாக
இருப்பதற்கு அந்த மக்கள் என்ன செய்வார்கள்? ஆனால் பெரும்பான்மை மக்கள் ஒன்று செர்ந்து
ஒரு மன கட்டமைப்பை உருவாக்கி, பிற மக்களை காட்டிலும் வளிமை நிறைந்தவர்களாக காட்ட முயற்ச்சிப்பதன்
விளைவே இந்த பிரிவினை உருவாகிறது. வளிமை பொருந்திய சமூகம் வளிமை குறைந்த சமூகத்தை அரவனைத்தே
செல்வதே மனித தன்மையாக இருக்க முடியும். அப்படி இல்லாமல் மாறான மனநிலையை கொண்டிருப்பதும்,
தலைமுறை தலைமுறையாக விதைக்கப் படுவதுமே பிரச்சனைகளுக்கு அடிப்படையாகிபோகிறது.
தொடர்பியல் சார்ந்த பார்வையில் பார்த்தோமென்றால் எல்லா திரைப்படங்களிலும்
துப்புரவு தொழில் செய்பவர்கள், ரவுடிகள், திருடர்கள், குடிகாரர்கள், பெண்ணை வன்புணர்பவர்கள்,
ஒரு சேரிப் பகுதி சேர்ந்தவனாக மட்டுமே காட்டப்படுவர். விதிவிலக்காக ஒரு சில திரைப்படங்கள்
இருக்கலாம். ஆனால் நம் சமூகத்தில் குடிசைப்பகுதி, சேரிப்பகுதி மக்களென்றால் இப்படித்தான்
என்று சினிமா திரைக்கொண்டு பொதுமக்கள் மனநிலை கட்டமைக்கப் பட்டிருக்கின்றது.
ஒரு அரசு அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில்
ஏன் எல்லா ஆண்டும் ஆயுத பூசை விடாது கொண்டாடப்படுகிறது? காரணம் பெரும்பான்மை மக்களின்
பூசையாக ஆயுத பூசை உள்ளது. ஏன் மாரியாத்தா, கங்கம்மா, பச்சையம்மா, சங்கிலி பூத்தர்,
சுடலைமாடன், அய்யனார், பனையாடியான், கருப்பசாமி, முனீஸ்வரன், என்னும் தெய்வங்களின்
பூசையோ, வழிபாடோ கல்லூரியில், அலுவலகத்தில் இருப்பதில்லை? சரி கிருத்துமஸ், ரமலான்,
ஈகை திருநாள், புத்தபூர்ணிமா, குருநானக் ஜெயந்தி கொண்டாடபடுகிறதா? பெரும்பான்மை சமூகத்தின்
வலிமை இது தான் . இதை எதிர்த்துதான் சிறுபான்மை சமூகம் போராடிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு
கட்டமைப்புகள் நிறைந்த சமூகத்தை நாம் திரையில் எவ்வாறு காண்பிப்பது ?
பாம்பே, ரோஜா, விஷ்வரூபம், துப்பாக்கி என வரிசையாக திரைப்படங்களை
இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்றால், தம் மதத்தை இழிவு படுத்தி விட்டது, இஸ்லாமியர்கள்
தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வீதியில் இறங்கி திரைப்படத்திற்க்கு எதிராக போராடுகிறார்கள்
என்றால் அவர்கள் சிறுபான்மை மக்களாக இருப்பதால் மட்டுமே, பெரும்பான்மையான மக்களிடம்
சிறுபான்மை மக்களை அவ்வாறு சித்தரிக்கின்றனர். சரி திரைப்பட குழுவினரின் பக்கம் உள்ள
நியாயம் என்ன ?
தமிழர் உணர்வுக்கு எதிராக திரைப்படம் வருகிறது என்று தமிழ்
ஆர்வலர்கள் திரைப்படத்திற்க்கு எதிராக போராடுகிறார்கள். தம் தலைவர், தலைவியை இழிவு
படுத்தும் படம் என்று போராடுகிறார்கள், அதோடு என் சாதியை, என் மதத்தை இழிவு படுத்துகிறது
என்கிறார்கள். என் தெய்வம், என் மொழி, என் பண்பாடு இழிவுப்படுத்தப்பட்டுவிட்டது…. இப்படி
திரைப்படத்திற்க்கு பல பக்கங்களில் இருந்தும் சிக்கல்கள் வருகிறது. அப்படி என்றால்
படைப்பாளி எதை தான் படமாக்குவது?
இப்படி போராடுபவர்களால் படைப்பாளிகள் தங்களுக்குள் ஒரு வலையத்தை
அமைத்துக்கொள்ள மாட்டார்கள? அப்படி போராட்டம் வரும் என்று அஞ்சி அப்படிப்பட்ட கதைகளை
படைப்பாளிகள் தேர்வு செய்ய வில்லை என்றால் அவர்கள் சமூகத்திற்க்கு தேவையான செய்திகளை
புறம் தள்ளுவதாக ஆகிவிடாதா? படைப்பாளிகள் பேச வேண்டிய சிக்கல்களை பேசாமல் பொய்யான படைப்பாளிகளாக
வளம் வர வழிவகை செய்வதாக மாறிவிடாதா? எ-டு இப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக ஓர் இயக்குனர்
படம் எட்டுத்தால் இந்துக்கள் ஆதரித்தால் அதே இயக்குனர் நாளை இந்துக்களுக்கு எதிராக
திரைப்படம் எடுத்தால் அவரின் நிலை?
இதை தொடர்ந்து நாம் ஆராய வேண்டியது போராடுபவர்கள் பக்குவமடையாதவர்களா?
திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கும் மனநிலை போராடுபவர்களுக்கு இல்லையா? அமெரிக்காவில்
வெள்ளை மாளிகை இடிந்து வீழ்வது போல , சிலுவை உடைவது போல காட்டினால் அவர்கள் சாதாரணமாக
எடுத்துக்கொள்கிறார்கள் ஆனால் இங்குள்ள மக்களால் முடிய வில்லை அல்லவா? அப்படி பல கோடி
செலவு செய்து திரைப்படம் படம் எடுத்தால் அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று போராடுவது
எந்த விதத்தில் நியாயம்? எல்லாவற்றிக்கும் மேலாக எம் சாதி, என் கடவுள், என் மதம், என்
தலைவன் , என் கட்சி, என் சின்னம் என்று போராடுவது எவ்வாறு சரியாக இருக்கும்.
திரைப்படம்
பிடிக்கவில்லை யென்றால் சட்ட ரீதியாகத்தானே போராட வேண்டும், திரையரங்கில் கூடி பொது
மக்களை அச்சுறுத்தி வழி மறுத்து போராடுவதா?
புகார் கொடுத்து வழக்கு தொடர்ந்து போராடுவது
தானே முறையாக இருக்கும்? திரைப்படத்திற்க்கு எதிரான போராட்ட வடிவங்கள் இப்படியும் உள்ளது
. அப்படி என்றால் நம் சமூகத்தில் கருத்து சொல்ல பல கோடி செலவிட பட வேண்டுமா?
நிஜத்தில்
பல கோடிகள் திரைப்படம் தயாரிப்பதற்க்கு மட்டுமா செலவாகிறது ?
நடிகருக்கே பல கோடி, நடிகைக்கு
சில கோடி என்றல்லவா போகிறது, இவர்கள் என்ன கருத்து சொல் கோடிகளை கணக்கு காட்டுவது ?
இது போக இவர்கள் எடுத்த திரைப்படத்தை ப்ரபளமாக்க இவர்களே சர்ச்சைகளை கிளப்பி விடுவதும்
. பின் அதை மறைப்பதுமாக சினிமா போய் கொண்டிருக்கிறது எல்லாம் பணம் பார்க்க தானே சினிமாவுக்கு
வருகிறார்கள் என்னும் கருத்து மேலோங்கி இருக்கிறது, அதே போல திரைப்படம் எடுத்து எல்லாம்
இழந்து, தொலைத்து, தற்கொலை செய்து செத்து மடிந்தவர்களும் நம் சமூகத்தில் உண்டு.
இப்படியான வணிக போராட்டங்களுக்கு மத்தியில் சினிமாவை சிக்க
வைக்கும் போக்கும் இங்கு உண்டு.
இவை அனைத்திற்க்கும் நீதிபதியாக இருப்பது தணிக்கை துறையே,
தணிக்கை துறைஅனுமதி பெற்று வெளியாகும் திரைப்படங்களுக்கு எதிராக போராடுவது சரியா தவறா
என்ற அடிப்படை கேள்வி என் ஆழ் மனதில் எழுகிறது , திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள்
ஏன் வலுக்கிறது? அதை எவ்வாறு கலைவது?
தணிக்கை துறை நிர்வாகத்தில் பல சிக்கல்கள் இருக்கலாம் ஆனால்
தணிக்கை அதிகாரிகள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? தணிக்கை துறை அதற்கே உரிய விதிகளின்
படியே நடக்கிறது. அவர்க்ளுக்கென்று ஒரு விதிமுறை பின்பற்றப் படுகிறது இருப்பினும் அவர்கள்
சார்ந்த நாட்டில் உள்ள மக்களின் மனநிலையை புரிந்த, உணர்ந்த அதிகாரிகளாக இருக்கிறார்களா?
அனைத்து திரைப்படங்களையும்
பாரபட்சம் இல்லாமல் மதிப்பிடுகிறார்களா ?
இன்று வெளிவரும் திரைப்படங்கள் எல்லாம் குழந்தைகள் மனதை பாதிக்காத,
மாணவர்கள் மனதை சீர்குலைக்காத, பெண்களை இழிவு படுத்தாத, ஆபாசமற்ற , பிற சாதி, மத, தலைவர்கள்,
சின்னகங்களை அலட்சியப்படுத்தாதவாறு இருப்பதாக உங்கள் மனம் ஏற்கிறதா?
அப்படி இருந்தால் ஏன் எதிர்ப்பும்
போராட்டங்களும் முளைக்கின்றன?
டேம் 999 திரைப்படத்தை ஏன் தமிழக விவசாயிகள் எதிர்க்க வேண்டும்
? ரஜினி சிகரெட்டினை பற்ற வைத்த காட்சியை பார்த்த சிகரெட்டிற்கு அடிமையாகி போன மாணவர்கள்
பலர். அதற்க்கு முன் சிவாஜி, அதற்க்கு முன் வள்ளுவன் குறள். பெண்களை சினிமாவை கொண்டு சீரழித்த இயக்குனர்கள் பலர்,
பெண்ணின் மார்பை தொட்டு,கை,இடை,தொடை,இதழ்,முதுகு,பின்புறம் என்று அங்கம் அங்கமாய் சினிமாவில்
கூறு போட்டார்கள், சுகன்யாவின் தொப்புளின் பம்பரம் விடுவதை எவ்வாறு தணிக்கை துறை அனுமதித்தது.
இன்னும் பல கோடி உதாரணங்கள் இவை எல்லாம் நம் இயல்பு வாழ்க்கையா? இப்படியா நம் இயல்பு
வாழ்வை சினிமா பிரதிபலிக்கும்? உங்கள் பிள்ளைகளுக்கு சினிமா என்று எதை காட்டுவீர்கள்
? அல்லது சினிமா மோசம் என்று கூற போகிறீகளா ? இந்த சினிமாவை மாற்றுவது யார்? சினிமா
என்றால் என்ன ? மீண்டும் தொடர்பியல் பார்வையோடு பரிசோதனை செய்வோம்.
Comments
Post a Comment