“மோடியை பிரதமர் ஆக்கியதே நான்தான்...!” - குபீர் சாமியாரின் பகீர்

 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கும் பலர், மாற்றுக் கருத்தைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய சூழலில், மிகவும் நிதானத்துடனும் மனக்கட்டுப்பாட்டுடனும் எதிர்த் தரப்பைக் கருத்தால் எதிர்கொள்கின்றனர். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உணர்ச்சிவயப்பட்டு நாகரிகத்தை இழக்கும் சிலரின் செயல்கள் பல நேரங்களில் அபத்தமாகிவிடுகிறது. நிகழ்ச்சிகளில் வாய்ச் சண்டை முற்றி மூக்குக்கு மேல் கோபப்பட்டு முறைதவறி அடிதடியில் இறங்கும் பலர், பின்னர் எல்லோரிடமிருந்தும் சரமாரியாக வாங்கிக்கட்டிக் கொள்கின்றனர். இப்படி ஒரு பெருமைக்குரிய சாமியார் டெல்லி பி.ஜே.பி-யின் சுவாமி ஓம் ஜி.

 சமீபகாலமாக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் பலர், பல விசித்திர செயல்களைச் செய்து விமர்சனங்களுக்கு உள்ளானார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சுவாமி ஓம் ஜி இவர்களுக்கெல்லாம் முன்னோடி. அப்படி இவர் செய்துவிட்டார் என்ன என்றுதானே நினைக்கிறீர்கள்? அவர் சொன்னவைகளையும், செய்தவைகளையும் கேளுங்கள்... உங்களுக்கே புரிந்துவிடும்..
 நெதர்லாந்து நாட்டிலே ‘BIG BROTHER’ என்கிற ரியாலிட்டி ஷோ மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுகிறது. பின்னர், இந்த நிகழ்ச்சியை இந்தியாவின் தனியார் தொலைக்காட்சி ஒன்று ‘BIG BOSS’ என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வட இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதில் கலந்துகொண்டதில் இருந்துதான், ‘சுவாமி ஓம் ஜி பிக் பாஸ்’ என்ற பெயரில் மிகவும் பிரபலமானார். ஆனால், எப்படிப் பிரபலமானார் என்பதுதான் ட்விஸ்ட். சென்ற இடம் எல்லாம் சண்டைகள் சர்ச்சைகள்; அவதூறு பேச்சுகள்; கொச்சை வார்த்தைகள்; அநாகரிகச் செயல்கள். தன்னோடு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவாதம் செய்த பெண்ணை, நேரலையின்போதே கன்னத்தில் அறைந்தார்; அதேபோல், பல பார்வையாளர்கள் கலந்துகொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அரங்கில் மற்றொரு விருந்தினருடன் சண்டையிட்டார்; ஒரு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் முகத்தில் தண்ணீரை விசிறி அடித்தார்.
சுவாமி ஓம் ஜி பல ரகசியங்களைக் கூறியுள்ளார். அவைகளை, நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம். ‘BIG BOSS 10’-ன் தொகுப்பாளரான நடிகர் சல்மான் கான், ‘‘ ‘போதையில், தான் ஒரு ISIS ஏஜென்ட்’ என தன்னிடம் தெரிவித்ததாகவும்; அவர், கன்னத்தில் நான் ஓங்கி அறைந்தேன்’’ எனவும் கூறியுள்ளார். ‘‘ஜனதா கட்சியின் சந்திரசேகர் இந்தியப் பிரதமரானதற்கு நான்தான் காரணம்’’ என்றதோடு, தற்போது மோடி பிரதமராவதற்கு, தான் மறைமுகமாக மிகப்பெரிய பங்காற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்துவிடுவோம்; 100 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்கப்போகிறேன்...’’ என இப்படியான பல தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் AIMS மருத்துவக் குழு இவருக்கு மனரீதியான சிகிச்சை அளிக்கவேண்டும் என அறிக்கை வெளியிட்டது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், சுவாமி ஓம் ஜியை தொலைக்காட்சியில் பார்க்க... வடஇந்திய நேயர்கள் பலர் தற்போது விரும்பவில்லை. கொடுமை என்னவென்றால் இப்படியான நபர்கள் அரசியல் சார்ந்தும் ஆன்மிகம் சார்ந்தும் மக்கள் மத்தியிலும், தொலைக்காட்சிகள் மத்தியிலும் முக்கியத்துவம் பெறுவதுதான் காலத்தின் கோலம்.
ஜோ.கார்த்திக்
Released in Vikatan e magazine   Posted Date : 14:39 (26/01/2017) 

Comments