ஐஸ் அசுரர்களின் ரகசிய உலகம்... உலகின் மிகப் பெரிய பனிக் குகை அதிசயம்!
ஐஸ் அசுரர்களின் ரகசிய உலகம்... உலகின் மிகப் பெரிய பனிக் குகை அதிசயம்!
ஆண்டு 1930, அந்த மலைத்தொடர் கோடைக்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. நடுவே இலையுதிர்காலம் வந்து சென்றதால், இலைகள் முழுவதும் உதிர்ந்து மரங்கள் அனைத்தும் களையிழந்து நிற்கிறது. கடுமையான பனிக்காலம் என்பதால், பகல் நேரத்திற்கான அவகாசம் மிகவும் குறைவு. மலையின் பாறைகளும் குகைகளும் நீர்நிலைகளும் பனியால் உறைந்துவிட்டன.
பனி உறைந்த இடம், ஸ்கேட்டிங் நடனப் பயிற்சிக்கு வசதியாக இருக்கும் என்று நம்பிய ஒலிம்பிக் ஜோடி ஒன்று, பல அடிஉயரம் பாறைகள்மீது பயணித்து. குகை ஒன்றின் அருகே, கால்களில் பொருத்தப்பட்ட தகடுகளுடன் சறுக்கு நடனமாடுகிறார்கள். அப்போது எதிர்பாராமல் விபத்து நிகழ்கிறது. உயிர் பிரிந்த நிலையில் அவர்களும் அவ்விடத்தில் உறைந்துவிடுகிறார்கள். அதன் பிறகு சுமார் 8 ஆண்டுகள் அந்தக் குகைப்பகுதிக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின் 1938-ல் பல நிபந்தனைகளுடன் மீண்டும் அந்தக் குகை திறக்கப்பட்டது. ஐரோப்பாவின் ஆஸ்திரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் "ஐஸ் அசுரர்களின் உலகம்" ( World of the Ice Giants ) என்று பலரால் வர்ணிக்கப்படுகிற ஐஸ்ரிஸன்வெல்ட் ( Eisriesenwelt ) எனும் இந்தக் குகைதான் உலகிலேயே மிகப்பெரிய பனிக் குகை.
நம் கிரகத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான குகைகள் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே பனிக் குகைகள். அதிலும் ஐஸ்ரிஸன்வெல்ட் குகை இன்றுவரையிலும் பல நாட்டு சுற்றுலாப் பயணிகளின் ’சில்’ தேசமாக விளங்குகிறது.
ஐஸ்ரிஸன்வெல்ட் குகை சாம்ராஜ்யம், பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இன்றைய தலைமுறையினருக்கு சில நூற்றாண்டுகளாகத்தான் தெரியும் !. 19-ம் நூற்றாண்டில் பல வேட்டைக்காரர்களுக்கு இந்தக் குகை நன்கு பரிச்சயமானாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை எவர் பார்வையிலும் இந்தக் குகை சிக்கவில்லை. முதன்முறையாக Anton Csorich von Monte Creto எனும் பெயிண்டரே ஐஸ்ரிஸன்வெல்ட் குகைக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரால் 200 மீட்டர் மட்டுமே குகைக்குள் பயணிக்க முடிந்தது. தொடர்ந்து பயணிக்க முடியாததால் திரும்பிவிட்டார். இவர் முதலாம் உலகப்போரில் ராணுவ அதிகாரியாக இருந்து மறைந்தார்.
ஐஸ்ரிஸன்வெல்ட் குகைக்கு நாம் செல்ல பனிக்காலம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அது அவ்வளவு சுலபமும் அல்ல, குகையினைச் சென்று சேர, 1000 அடி உயரம், பனிமலையில் பயணிக்க வேண்டும்! எவ்வளவு அலுப்புடன் நாம் பயணித்திருந்தாலும், குகையை அடைந்ததும் மனம் குளிர்ந்துவிடும். குகையினை 42 கிமீ தூரம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருந்தாலும், பார்வையாளர்களுக்கு 1 கிமீ வரையே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தக் குகையானது மொத்தம் 30000 சதுர மீட்டர் பரப்பளவுடையது. குகையில் இயற்கையாய் உருவான உறைபனியின் வடிவங்கள் நம்மை வியக்கவைக்கும். தானே தோன்றிய பனிச்சிலைகளின் உருவங்களைக் கண்டு, நமக்குள் படிந்த பிம்பங்களுடன், கற்பனையில் நாமே ஒப்பிட்டுக்கொள்வோம். மொத்தத்தில் அங்கே செல்லும்போது, வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் வெளியிட்ட ராணி எல்சாவின் பனி அரண்மனையில் இருப்பது போன்றே உணர்வீர்கள்! அவ்வாறு பனியால் நிறைந்த சொர்க்கமே இந்த இடம்.
ஆனால் இங்கு பயணிக்க, முக்கியக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, திடமான உடல்நலம், ஆரோக்கியம் இருப்பவர்கள் மட்டுமே குகைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அவ்வாறு செல்பவர்களும், உடன் வரும் வழிகாட்டிகளின் மேற்பார்வையில்தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முறையான பாதுகாப்பு உபகரணங்களும் கட்டாயம். பனிக்காலங்களில் பயணிகளின் வருகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் இதே வேளையில், இவ்விடத்தை ஒலிம்பிக் ஸ்கேட்டிங் வீரர்களுக்காக ஒதுக்கி அவர்கள் பயிற்சி எடுக்க உதவ வேண்டும் என்கிற கோரிக்கையும் பல ஸ்கேட்டிங் ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது. குகைக்கு மக்கள் பயணிக்க 1955-ம் ஆண்டு முதல் கேபிள் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மே 1 முதல் அக்டோபர் 26 வரை மட்டுமே பயணிகள் குகைக்குள் அனுமதிக்கப்படுவர். அடுத்த மாதம் மே ! சும்மா இருந்தா எப்படி?
ஜோ.கார்த்திக்
Released in vikatan e magazine Posted Date : 20:55 (05/04/2017)



Comments
Post a Comment