ஒரே நாளில் ரூ.3.45 லட்சம் லாபம் பார்த்த கல்லூரி மாணவிகள்!

வாழ்வில் சுயதொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசை ஒருவருக்கு எப்போது வேண்டுமென்றாலும்
வரலாம். ஆனால், சுயதொழிலுக்கான முடிவை நீங்கள் எடுக்கும் தருணம் என்பது மிக முக்கியமானது.
வேறு வழி இல்லாமல் சுயதொழில் துவங்குவதைவிட, இளமைப் பருவத்திலேயே, சுயதொழில் துவங்குவதற்கான பாதைகளை, முயற்சிகளை மேற்கொள்வது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இந்த அவசியத்தை மாணவியர்களுக்கு உணர்த்தும் வகையில், சென்னை எத்திராஜ் கல்லூரியின் வங்கி மேலாண்மைத் துறை, மாணவியரின் தொழில்முனைவுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், ED-BAZAAR எனும் சுயதொழில் நிகழ்வு ஒன்றை சில நாட்களுக்குமுன் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் பலர், தங்களுக்கு விருப்பமான தொழிலை அவர்களே தேர்வு செய்து, ஸ்டால்கள் அமைத்திருந்தனர். 
 சுமார் 115 விதமான ஸ்டால்கள் இந்த பஜாரில் இடம்பெற்றது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த பஜாரில்  கலந்துகொண்டனர். 115 ஸ்டால்களின் மொத்த முதலீடு ரூ.8 லட்சம் எனவும், அதிலிருந்து  அன்றைய ஒரு நாளில் மாணவிகளுக்கு கிடைத்த லாபம் ரூ.3.45 லட்சம் எனவும் இந்த பஜாரை நடத்தியவர்கள் தெரிவித்தார்கள். 
மாணவிகளின் ஆர்வத்தினாலும், கடும் முயற்சியாலும் அமைக்கப்பட்ட ஸ்டால்கள் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, கைவினைப் பொருட்கள், புகைப்படம்-பிரேம்கள், ஓவியங்கள், இன்ஸ்டண்ட் புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள், பொம்மைகள், கைவினை ஆபரணங்கள், பச்சை குத்துதல், மருதாணி கலை, ஆடைகள்,  அழகு சாதனப்பொருட்கள், உணவு மையங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். 
இந்த பஜாரில் ஸ்டால் அமைத்த மாணவிகள் சிலர் கூறியது:
ப்ரியதர்ஷிணி
''என்னோட இந்த முயற்சி எனக்கு நம்பிக்கைய கொடுத்து இருக்கு. பட்ஜெட் ரொம்ப முக்கியமா இருக்கு. இப்போதைக்கு எங்க பட்ஜெட் என்னவோ அதை வச்சி டெரக்கோட்டா ஸ்டால் போட்டுட்டோம். ஆனா, எதிர்காலத்துல பெரிய அளவுல பண்ணனும்னு ஆசை.''
சொவினா 
''இந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்துச்சி. இந்த ஸ்டால் கல்லூரியோட நிச்சயம் முடியாது. கூடிய சீக்கிரம் களத்துல இறங்கப்போறோம்!''
கல்பணா
''அடிப்படையில எங்க குடும்பம் பிஸ்ணஸ்தான். அப்பா, அண்ணன், அக்கா, இப்படி எல்லாரும் ஒவ்வொரு பிஸ்னஸ் பண்றாங்க. பிசினஸ்ல இறங்கனும்னு எனக்கும் சின்ன வயசுல இருந்தே ஆசை. இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல் இருந்துச்சு.''
இவ்வாறு பல மாணவிகள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இதை நடத்திய பேராசிரியைகள் சிலருடன் பேசினோம். 
''சமுதாயத்தில் தொழில்முனைவதில் பெண்கள் மேம்பட வேண்டும், புதுமையான யோசனைகளுடன்  தொழில் முனையவும், ஒரு பொதுவான குறிக்கோளை நோக்கி மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், கூட்டுறவு அணுகுமுறைகளை அனுபவரீதியாக மாணவிகள் கற்கவும், லாபம், பகிர்வு போன்றவற்றைக் கையாளவும், சக போட்டியாளர்களை எதிர்கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும்'' என்றனர்.
இது மாதிரி ஒவ்வொரு கல்லூரியும் செய்தால், தமிழகம் முழுக்க பல ஆயிரம் பிசினஸ்மேன்களை (வுமன்களையும்தான்) நம்மால் உருவாக்க முடியுமே!
ஜோ.கார்த்திக்
Released in Vikatan e magazine Posted Date : 19:19 (20/03/2017)  

Comments

Popular posts from this blog

வேலை வாய்ப்பு பயிற்சி அறிக்கை {INTERNSHIP REPORT}-இளந்தளிர் சமுதாய வானொலி 20-DEC-2011-20-JAN-2012

சென்னையில் இப்படி ஒரு மியூசியம் இருப்பது தெரியுமா? #InternationalMuseumDay

3,000 ஆண்டு பழமையான 30 அடி உயர சிலை! எகிப்தை ஆச்சர்யப்படுத்திய அதிசயம்